இலங்கை அரசியல் வரலாற்றில் பதவி விலகும் முதலாவது ஜனாதிபதி – கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன , இந்த தகவலை இன்றிரவு வெளியிட்டார்.

” அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிப்பதற்காகவே ஜனாதிபதி புதன்வரை அவகாசம் கோரியுள்ளார். இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துமாறு அவர் என்னிடம் கூறினார்.” – எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

எனவே, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று மாலை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது,

1) ஜனாதிபதி மற்று பிரதமர் விரைவில் தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்தல்.

2) நாடாளுமன்ற ஜனநாயக முறைமைக்கு அமைய மற்றும் அரசியலமைப்புக்கு இணங்க அடுத்த கட்டமாகப் பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஏழு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்டி பொது இணக்கப்பாட்டுடன் தீர்மானமொன்றை எடுத்தல்.

3) அந்த ஜனாதிபதியின் கீழ் தற்பொழுது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வகட்சிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் இணக்கத்துடன் புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல்.

4) இதன் பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை தெரிவுசெய்ய மக்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குதல்.

போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டன. இது தொடர்பில் சபாநாயகரால், ஜனாதிபதிக்கு இன்று மாலையே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகுவார் என்ற அறிவிப்பை ஜனாதிபதி விடுத்துள்ளார். சர்வக்கட்சி அரசு அமையுமானால், பிரதமர் பதவியை துறக்க தயார் என பிரதமரும் அறிவித்துள்ளார்.

இலங்கையில் 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது.

முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன. அவர் இரு தடவைகள் பதவி வகித்தார்.

2 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச. அவர் சுட்டு கொல்லப்பட்ட பின்னர், டிபி விஜேதுங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

4 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார். அவரும் இரு தடவைகள் பதவி வகித்தார்.

5 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. அவரும் இரு தடவைகள் பதவி வகித்தார். அரசமைப்பை மாற்றியமைத்து, மூன்றாவது முறை போட்டியிட்டு தோல்வி கண்டார்.

6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவர் ஒரு தடவை மாத்திரமே பதவி வகித்தார்.

7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

இலங்கை அரசியல் வரலாற்றில் ரணசிங்க பிரேமதாச மட்டுமே குற்றப் பிரேரணையை அச்சுறுத்தலை எதிர்கொண்டார். அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. எந்தவொரு ஜனாதிபதியும் இடையில் பதவி விலகி செல்லவும் இல்லை.

ஆக – இலங்கை வரலாற்றில் பதவி விலகிய முதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாக இடம்பிடிக்கவுள்ளார்.

ஆர்.சனத்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: