நாட்டை விட்டு பதவி துறந்து பயந்தோடிய ஜனாதிபதியாக கோட்டா

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, இன்று அதிகாலை தனது பாரியார் சகிதம் நாட்டிலிருந்து வெளியேறினார்.

இலங்கை விமானப்படைக்கு உரித்தான விமானமொன்றில், இரு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் அவர் மாலைதீவு நோக்கி சென்றடைந்தார் என பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 3 மணியளவில் மாலைதீவு தலைநகரான மாலேயிலுள்ள விமான நிலையத்தை சென்றடைந்த கோட்டாபய ராஜபக்ச, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பாதுகாப்பான இடமொன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார் என மாலைதீவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைதீவிலிருந்து கோட்டாபய ராஜபக்சவும், அவரின் பாரியாரும் அமெரிக்கா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

அமெரிக்க குடியுரிமையை கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த குடியுரிமையை துறந்தார். ‘ஜனாதிபதி’ என்ற பதவி நிலை அந்தஸ்த்தையும் அவர் தற்போது இராஜினாமா செய்துள்ளார். இவ்வாறான பின்புலத்தில் அமெரிக்கா சென்றால் தனக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சமும் கோட்டாவை சூழ்ந்துள்ளது என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

வெளிநாடு பறக்க முன்னர், தனது பதவி விலகல் கடிதத்தில் கோட்டாபய ராஜபக்ச கையொப்பமிட்டார் எனவும், இராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் இன்றைய தினத்துக்குள் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார் எனவும் தெரியவருகின்றது. ஜனாதிபதி ஜுலை 13 ஆம் திகதி பதவி விலகுவார் என்ற அறிவிப்பை கடந்த 9 ஆம் திகதி சபாநாயகர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது.
முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன. அவர் இரு தடவைகள் பதவி வகித்தார்.

2 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச. அவர் கொல்லப்பட்ட பின்னர், டிபி விஜேதுங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

4 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார். அவரும் இரு தடவைகள் பதவி வகித்தார்.

5 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. அவரும் இரு தடவைகள் பதவி வகித்தார். அரசமைப்பை மாற்றியமைத்து, மூன்றாவது முறை போட்டியிட்டு தோல்வி கண்டார்.

6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவர் ஒரு தடவை மாத்திரமே பதவி வகித்தார்.

7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

இலங்கை அரசியல் வரலாற்றில் ரணசிங்க பிரேமதாச மட்டுமே குற்றப் பிரேரணையை அச்சுறுத்தலை எதிர்கொண்டார். அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. எந்தவொரு ஜனாதிபதியும் இடையில் பதவி விலகி செல்ல இல்லை. பயந்து நாட்டை விட்டு ஓடியதும் கிடையாது.

ஆக – இலங்கை வரலாற்றில் பதவி விலகிய – வெளிநாட்டுக்கு பாய்ந்தோடிய முதல் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவாக இடம்பிடிக்கவுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதென சபாநாயகர் அறிவித்ததும், பிரதமர் பதவி விலகாவிட்டால் அவரே, பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். நாளை மறுதினம் நாடாளுமன்றம்கூடும்வரை அவர் பதவியில் நீடிக்கும் சாத்தியம் உள்ளது.

இதற்கிடையில் ஜனாதிபதி பதவிக்கு சஜித், ரணில், அநுர அல்லது டலஸ் போட்டியிடக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. சஜித்தை ஜனாதிபதியாக்கி, டளஸை பிரதமராக்குவதற்கான பேச்சுகள் தொடர்கின்றன. இதற்கு மொட்டு கட்சி இணங்கினால் ஜனாதிபதி தெரிவு ஏகமனதாக இடம்பெறும். அவ்வாறு இல்லாவிட்டால் இரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டிய நிலை உருவாகும்.

பொது இணக்கப்பாட்டுக்கு வருவது நேற்றைய தினம் பேச்சுகள் இடம்பெற்ற நிலையில், இன்றும் சந்திப்புகள் தொடரவுள்ளன.

ஆர்.சனத்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: