இயலாமை அரசியலிலிருந்து சிறுபான்மை மீள்வது எப்போது?

சுஐப் எம்.காசிம்

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த வாக்களிப்பில், வெளியாகிய பல சங்கதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் அரசியல் வியூகங்களை வரவேற்றிருக்கிறது. கட்சித் தலைமைகளின் உத்தரவு ஒரு புறமிருக்க, தற்போதைய யதார்த்தம் என்னவென்பதில் இந்த எம்.பிக்கள் தெளிவாக இருந்துள்ளனர். இதனால்தான், அதிக கட்சிகள் ஆதரித்தவரால்கூட வெற்றிபெற முடியவில்லை.

தலைமைகள் தீர்மானித்தாலும் எம்.பிக்கள் அவற்றுக்கு கட்டுப்படாது யதார்த்தத்தை சிந்தித்துள்ளனர். அதற்காக கட்சித் தலைமைகள் எடுத்த தீர்மானங்கள் தவறென்பதுமில்லை. பொருத்தமான தீர்மானங்களாக இருந்தாலும் பொருந்தாத நேரத்தில் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கி்ன்றன. புதிய ஜனாதிபதியின் உரையிலிருந்துதான் இந்த முடிவுக்கு வர முடிகிறது. சகல கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமும், ஒத்துழைப்பும்தான் நாட்டின் நெருக்கடியைத் தீர்க்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இவரிடம் இந்த தெளிவு இருந்ததால்தான், கட்சிகளின் உத்தரவுகளை மீறி எம்.பிக்கள் வாக்களித்திருப்பதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி வெற்றிடத்துக்கு பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில், கட்சிகள் சிலதின் தலைமைகள் நல்ல படிப்பினைகளை பெற்றிருக்கும். அரசியல் போட்டி அல்லது பழிவாங்கலில் ஈடுபடுவதற்கான நேரம் இதுவல்ல என்பதையே, தலைமைகளின் உத்தரவை மீறிய எம்.பிக்கள் உணர்த்தியுள்ளனர். நாட்டிற்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற சர்வதேச உதவிகளை விரைவாக கொண்டுவரக்கூடிய ஆளுமையைத்தான் பாராளுமன்றம் தெரிந்திருக்கிறது. இந்தத் தெரிவில் தலைமைகளுக்கு இல்லாத தெளிவுகளா இந்த எம்.பிக்களிடம் இருந்தன? இந்தக் கேள்விக்கு தேர்தலில் எதிர்த்தவர்கள் பின்னர், ராஜபக்‌ஷக்களின் அமைச்சரவையில் ஒடிவந்து இணைந்த வரலாறுகளை பதிலாகத் தருகின்றது.

எனவே, புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏற்கனவே விரும்பியதைப் போன்று சர்வகட்சி அரசாங்கத்துக்கு இணங்கி, போட்டியின்றி ஒருவரை பாராளுமன்றத்தில் தெரிந்திருக்கலாம். அவ்வாறு தெரிந்திருந்தால் எஞ்சியுள்ள காலங்களில் பழிவாங்கல் இல்லாத, பாரபட்சம் காட்டாத அரசியல் கலாசாரம் உருவாகியிருக்கும். இந்தக் கலாசாரத்தையே எமது நாடு இன்று வேண்டி நிற்கிறது. நாற்பது வருடங்கள் பழமைவாய்ந்த நமது நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கான சிறந்த சூழலையும் இந்தக் கலாசாரம் ஏற்படுத்தியிருக்கலாம்! பரவாயில்லை, புதிய ஜனாதிபதி இன்னும் அதே மனநிலையில் அதாவது, போட்டிநிலவும், கழுத்தறுப்புச் செய்யும், பழிவாங்கும் மனநிலையை மேலாங்கச் செய்யும் அரசியலை ஒழிக்கவே ஆசைப்படுகிறார். இதற்காகத்தான், எதிர்த்து வாக்களித்த கட்சிகள் மற்றும் எம்.பிக்களிடம் ஒத்துழைப்பையும் கோரி, அமைச்சரவையில் இணையுமாறு அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது.

மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படும் போதுதான், பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவிகளை வகிக்க விரும்புவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை விடாப்பிடியாக இருக்கிறது. இது அக்கட்சி இன்னும் போட்டி அரசியலை விரும்புவதையே வெளிப்படுத்துகிறது. மக்களுக்குத்தானே ஆட்சி, அவர்களை வழிப்படுத்தத்தானே நிர்வாகம் மற்றும் சட்டங்கள். நாடு இப்போது சென்றுள்ள அதலபாதாள நெருக்கடிக்குள் தேர்தலை நடாத்தவா நேரம் அல்லது நிதியா நம்மிடம் இருக்கிறது? இதற்காகத்தான், பாராளுமன்றத்துக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களால்தானே தெரிவு செய்யப்பட்டனர். அவ்வாறானவர்கள் பாராளுமன்றத்தில் ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வதால் ஜனநாயகத்துக்கு என்ன ஆபத்து? எனவே, இந்த வாக்களி்ப்பில் போட்டி அரசியலே விரும்பப்பட்டிருக்கிறது. இந்த விருப்பத்தின் பிடியிலிருந்து சில சிறுபான்மைத் தலைமைகளால் விடுபட முடியவில்லை. இதனால், யதார்த்தம் எதிர்க்கப்பட்டிருக்கிறது. எந்த நிபந்தனைகளும் இல்லாமல் இணங்கிச்சென்றதுதான் இதிலுள்ள கவலை.

தமிழ், முஸ்லிம் ஒற்றுமைகள் பற்றிப்பேசும் அல்லது வலியுறுத்தும் சிறுபான்மை தலைமைகள் ஒரேயணியில் நின்றது ஆறுதலாக இருந்தாலும், வேட்பாளருடன் எட்டப்பட்ட விடயங்கள் தனித்தனியாக இடம்பெற்றிருப்பதை அவதானித்தால், பொதுவெளியில் (வடக்கு, கிழக்கு) இணையும் சாத்தியம் இருக்கவில்லை என்பது இரட்டிப்புக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், ஈ.பி.டி.பி, இ.தொ.கா மற்றும் தேசிய காங்கிரஸும் அளவீடுகளைச் சரியாகச் செய்திருப்பது தமிழ் பேசுவோருக்குச் சந்தோஷம்தான்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: