அரகல போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்

இலங்கையின் அரசியல் களம் கடந்த சில மாதங்களாகப் பரபரப்பு நிறைந்ததாகக் காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி காலிமுகத்திடலில் ஆரம்பமான மக்கள் போராட்டம் படிப்படியாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதுடன், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டங்கள் பின்னர் வன்முறைக்கு வித்திட்டமையும் நாம் அறிந்த விடயமாகும்.

’அரகல’ போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்! குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீடு செல்ல வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்ததாக இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இதன் இலக்குப் பின்னர் திசைமாறிப் பயணித்ததையும் காணக் கூடியதாவிருந்தது.

சில நாட்களின் பின்னர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற அத்தனை உறுப்பினர்களும் வீடு செல்ல வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பியதும், சாதாரண மக்களுக்கே இப்போராட்டத்தின் உள்நோக்கத்தில் சந்தேகம் தோன்றியது.

இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமைக்கான நோக்கங்களை ஆராய்வதாயின், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் எடுக்கப்பட்ட சில கொள்கை ரீதியான தீர்மானங்கள் நடைமுறைக்குச் சாத்தியமானதாக இல்லாத காரணத்தால் அரசு குறித்து மக்கள் மத்தியில் விசனம் ஏற்பட்டிருந்தது. அதுவே இப்போராட்டத்தின் ஆரம்பப் புள்ளி ஆகும்.

குறிப்பாக சேதனப் பசளையை ஊக்குவிக்கும் நோக்கில் திடீரெனக் கொண்டுவரப்பட்ட இரசாயன உரத் தடை, பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதித் தடை உள்ளிட்ட கொள்கைத் தீர்மானங்களை இதற்கான உதாரணங்களாக எடுத்துக் கொள்ள முடியும்.

இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்கு எதிராக விவசாயிகள் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்த போதும், அப்போராட்டங்கள் பெரியளவில் எடுபடவில்லையென்றே கூற வேண்டும். இருந்தபோதும் தமது பாதிப்புகள் குறித்து விவசாயிகள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தனர்.

விவசாயிகளின் இந்தப் போராட்டங்கள் குறித்து பாரம்பரிய ஊடகங்கள் அவ்வப்போது செய்திகளை வெளியிட்டிருந்தாலும், சமூக ஊடகங்களின் ஈர்ப்பை அவை பெற்றிருக்கவில்லை. இதனால் விவசாயிகளின் போராட்டங்கள் அதிகம் பேசப்படவில்லை.

டொலர் பற்றாக்குறை காரணமாகப் போதியளவு எரிபொருளை அரசினால் கொள்வனவு செய்ய முடியாது போனதால் மின்சாரத் துண்டிப்பை அமுல்படுத்தும் நிலைமையும், போதியளவு எரிபொருளை விநியோகிக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டது.

இரசாயன உரப்பற்றாக்குறையினால் விவசாயம் பாதிக்கப்பட்ட வேளையில் போராட்டங்கள் மீது காண்பிக்கப்படாத அக்கறை, மின்சாரத் துண்டிப்பு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை வேளையில் அக்கறையுடன் நோக்கப்பட்டது. கிராமத்திலுள்ள விவசாயிகள் போராட்டம் நடத்திய போது பெரிதாகத் திரும்பிப் பார்க்காதிருந்த சமூக ஊடகங்கள், கொழும்பில் உள்ளவர்கள் மின்சாரத் துண்டிப்பு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையைத் தொடர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மீது அக்கறை காண்பிக்கத் தொடங்கின. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி போராட்டங்களுக்காக மக்கள் ஒன்றிணைக்கப்பட்டனர்.

இவ்வாறு ஒன்றிணைக்கப்பட்ட குழுவினரே கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட வீட்டுக்கு முன்னால் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்ததுடன், இறுதியில் அங்கு வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. பெருந்தொகையான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மக்கள் போராட்டம் வன்முறையாக மாறிய முதலாவது சம்பவமாக இது அமைந்தது.

இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிது சிறிதாக மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில், ஏப்ரல் 09ஆம் திகதி காலிமுகத்திடலில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இவ்வாறு ஒன்றுகூடியவர்கள் காலிமுகத்திடலுக்கு அருகில் கூடாரங்கள் அமைத்து அங்கேயே தங்கத் தொடங்கினர். இங்கு ஆர்ப்பாட்டம் தொடங்கிய ஆரம்பத்தில் உண்மையான நோக்கத்தில் மக்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். நாட்கள் செல்லச் செல்ல நேர்மையான நோக்கத்துடன் கலந்து கொண்டவர்கள் பின்தள்ளப்பட்டு அரசியல் பின்புலம்கொண்ட சக்திகள் காலிமுகத்திடல் போராட்டக் களத்தைக் கைப்பற்றத் தொடங்கியிருந்தன.

இவ்வாறு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் பூர்த்தியடைந்த நிலையிலேயே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட அரசியல் ஆதரவாளர்கள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல்வாதிகள் பலருடைய வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

ஏற்கனவே குறிப்பிட்டது போல காலிமுகத்திடல் போராட்டக் களம் அரசியல் பின்னணி கொண்ட சக்திகளால் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், பிரதேச ரீதியில் அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வன்முறைகளின் பின்னணியில் இடதுசாரிக் கொள்கையைக் கொண்ட அரசியல் கட்சிகள் இருப்பதாகப் பலரும் விமர்சித்திருந்தனர்.

ஆங்காங்கே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த போதும், காலிமுகத்திடல் போராட்டம் தொடர்ந்து கொண்டே வந்தது. போராட்டம் தொடர்ந்த போதும், நாளுக்கு நாள் அதில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

மறுபக்கத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயுத் தட்டுப்பாடு என நெருக்கடிகள் அதிகரித்து வந்தமையால் அரசு மீது மக்களுக்கான அதிருப்தி அதிகரித்தது. இந்த நிலையிலேயே ஜுலை 09 ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் காலிமுகத்திடலில் ஒன்றுகூடி அரசுக்கு எதிரான எதிர்ப்பினை வெளியிட்டனர். இதனால் ஜனாதிபதியாகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

மக்கள் ஒன்றுதிரண்டு அரசாங்கத்தை மாற்றியதாக இலங்கை வரலாற்றில் பதிவானதுடன், பாரியதொரு மக்கள் எழுச்சியாகவும் அந்நிகழ்வு பார்க்கப்பட்டது. தாம் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்ட போதும், அரசியல் நோக்கம் கொண்ட சக்திகள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் என்பவற்றைக் கைப்பற்றின.

இவை தவிரவும், அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டையும் விஷமிகள் திட்டமிட்டுக் தீயிட்டுக் கொளுத்தியிருந்தனர். இதனை விட பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதால், போராட்டம் திசைமாறிப் பயணிக்கிறது என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தியது.

இவ்வாறான வன்முறைகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்ததுடன், பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியானார்.

இருந்தபோதும் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் நடவடிக்கை அரசியலமைப்புக்கு உட்பட்டதாக பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இதில் மக்கள் பிரதிநிதிகளின் பெரும்பான்மையானவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். பெரும்பான்மை வாக்குகளால் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார்.

ஆரம்பம் முதல் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடக்குமுறை மேற்கொள்ளப்படக் கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவாக இருந்ததுடன், வன்முறைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதையும் கூறி வந்தார். புதிய ஜனாதிபதி தெரிவான போதும், காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிடவில்லை.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனப் புதிய கோஷத்தை அவர்கள் முன்வைக்கத் தொடங்கினர். இதன் மூலம் அவர்களுக்கு தெளிவானதொரு குறிக்கோள் இல்லையென்பது புலப்பட்டது. அரசியல் கட்டமைப்பு மாற்றமொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், அதனை முன்னிறுத்தி நடத்தப்படும் போராட்டம் உரிய இலக்கை நோக்கிச் செல்வதாகத் தெரியவில்லை. இதனால் நாளுக்கு நாள் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது.

அதேநேரம், ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானதும், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவந்து மூன்றாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகனத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதில் சர்வகட்சி அரசாங்கமொன்றுக்கான தேவையை அவர் அழுத்தமாக வலியுறுத்தியிருந்ததுடன், இதற்கான பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்துள்ளார். அவருடைய கொள்கைப் பிரகடன உரையில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கியிருந்தன. இதனால் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை எதிர்க்கட்சிகளாலும் சாதகமாகப் பார்க்கப்பட்டது. அது மாத்திரமன்றி, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நடத்திவரும் சந்திப்புக்களிலும் சாதகமான சமிக்ஞைகள் வெளியாகி வருகின்றன.

நாட்டை இக்கட்டான சூழலில் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உரிய காலஅவகாசத்தை வழங்கிப் பார்க்க வேண்டும் என்றதொரு நிலைப்பாடு சாதாரண பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பல வருடங்களாக எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களால் நாடு பாரியதொரு வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையில் ஒரு சில வாரங்களில் இதனை மீட்டுக் கொண்டுவருவது எவராலும் சாத்தியமற்றது என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்.

எனவே ஜனாதிபதிக்கு அதற்கான உரிய அவகாசத்தை வழங்குவதுடன், நாட்டை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது பலரது எண்ணமாக உள்ளது. ஆட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு சில வாரங்களில் எரிவாயுப் பிரச்சினை, எரிபொருள் பிரச்சினை என்பவற்றில் சாதகமான மாற்றங்கள் தென்படுகின்றன. புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு இது ஊக்கசக்தியாகவும் அமைந்திருக்கின்றது.

தற்போது களையிழந்து போயுள்ளது காலிமுகத்திடல் போராட்டக்களம். ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டிருந்த நிலைமை மாறி, இப்போது நூற்றுக்கணக்கானவர்களையே அவ்விடத்தில் காண முடியாமல் போனதற்கான காரணங்கள் ஆராயப்படுவது அவசியம்

இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளில் கல்விப் புலமையும், மிகவும் அனுபவமும் கொண்டவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணப்படுவதால், நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர் நடவடிக்கைகள் எடுப்பார் என்ற எண்ணப்பாடு மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. தனியொருவராக எல்லாப் பிரச்சினைகளையும் அவரால் தீர்க்க முடியாது என்பதால் அனைவரும் ஒன்றிணைந்த ஒத்துழைப்பு வழங்குவது காலத்தின் தேவையாகும் என்றே மக்கள் கருதுகின்றனர்.

அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் வீடு செல்ல வேண்டுமெனின், நாட்டை நிர்வகிக்கப் போவது யார்? நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான காலஅவகாசத்தை அரசியல் அனுபவமும், கல்விப் புலமையும் நிறைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க வேண்டுமென்பதே தற்போது நாட்டு மக்களின் அபிப்பிராயம் ஆகும்.  நன்றி வாரமஞ்சரி

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: