இடைக்கால பட்ஜெட் அரசு செலவீனங்களுக்கும் நஷ்டத்துக்கும் கடிவாளமிடும் ஒரு முயற்சி

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல் துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

ஏற்கெனவே அரசாங்கம் அறிவித்துள்ள வரி அதிகரிப்புகள் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் ஏற்கெனவே 8 வீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருந்த பெறுமதி சேர்வரி என்று அழைக்கப்படுகின்ற வரி 15 சதவீதம் வரை செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கடுகதியில் பொருட்களின் சேவைகளின் விலையதிகரிக்கப்பட்ட பட்டியல்கள் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதையும் காணமுடிகிறது. பொதுசனம் செலுத்துவதையும் காணமுடிகிறது. மறுபுறம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து வருமான வரிவீதங்கள் உயர்த்தப்படுவதோடு் வரிவிலக்களிக்கப்பட்ட வருமானத்தின் எல்லை வருடத்திற்கு 12 இலட்சம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வரிசெலுத்தும் வருமானப்பிரிவில் உள்ளவர்கள் இருபுறமும் இடிவாங்கி தமது வருமானத்தில் பெரியதொரு தொகையை வரியாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக வரிசெலுத்தும் அளவு வருமானம் ஈட்டும் வேலை செய்வோரில் கணிசமான எண்ணிக்கையினர் மிகக்குறைந்த வருமானத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுவர். காரணம் தொழில்புரிவதன் மூலம் வரிசெலுத்துமளவு வருமானம் (employment income earners) ஈட்டுவோரில் பலர் கடனாளிகளாக உள்ளனர்.

வீட்டுக்கடன், வாகனக் கடன் என்று அவர்தம் மாதாந்த வருவாயில் கணிசமான தொகையை கடன் மீளச் செலுத்தலுக்காக செலுத்திய நிலையில் வரி அதிகரிப்பும் இணைந்து அவர்களின் உண்மையான மாதாந்த வருவாயை மிகக் கீழ்மட்டத்திற்கு தள்ளிவிடும் நிலையும் உருவாகலாம். வருமானத்துடன் ஒருவரது கடன் சுமை மற்றும் ஏனைய பொறுப்புகள் என்பவற்றையும் கவனத்திற்கொண்டு வரிவிதிக்கும் நடைமுறை இலங்கையில் இல்லாத நிலையில் இது மிகப்பெரும் சுமையை ஏற்படுத்தலாம்.

பெறுமதி சேர்வரி, வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது அறவிடப்படும் வரி மற்றும் தொழில்புரிவோர் மீது விதிக்கப்படும் வரி என்பனவே இலங்கை அரசாங்கங்களின் விருப்பத்தெரிவாக உள்ளன. முக்கிய காரணம் இவற்றை அறவிடுவது இலகுவாக இருப்பதாகும். இந்த வரிச் சீர்திருத்தங்கள் மூலம் அதிக வருவாயைத் திரட்டலாம் என்று அரசு நம்புகிறது. காரணம், இவை நெகிழ்ச்சியற்ற வரிகளாகும். ஒரு பொருளை அல்லது சேவையை நுகரும்போதே பெறுமதி சேர்வரி அறவிடப்பட்டு விடுகிறது.

ஒரு பொருள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போதே இறக்குமதி வரி அறவிடப்பட்டு விடுகிறது. ஒருவரது சம்பளப் பட்டியலிலிருந்து நேரடியாக தனிநபர் வருமான வரி அறவிடப்பட்டு விடுகிறது. அவற்றைத் தவிர்ப்பது கடினம். அவை அரசாங்கத்திற்கான திடமான வருவாயைப் பெற்றுத்தரும் மூலங்களாகும்.

2018இல் பதவியிலிருந்த அரசாங்கம் இந்த வரிவீதங்களையே அறவிட்டதாகவும் அந்த வரிவீதங்களுக்கே மீளத் திரும்பியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு ஆறுதல் சொல்லப்படுகிறது. ஆனால் 2018 இல் இலங்கை இருந்த பொருளாதார சுூழலில் இப்போது இல்லை. பொருளாதார வளர்ச்சி இல்லை. நாட்டில் பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்கிறது. எரிபொருள், உணவு, எரிவாயு, மின்சாரக்கட்டணம், நீர்க்கட்டணம் என்று சகலதும் அதிகரித்துள்ள நிலையில் ரூபாவின் உள்நாட்டுப் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் பணரீதியிலான பெயரளவு சம்பளங்களிலும் கூலிகளிலும் (nominal wages and salaries) எவ்வித அதிகரிப்பும் இக்காலப்பகுதியில் ஏற்படாத நிலையில் மக்களின் மெய் வருமானம் (real income) எனப்படும் கொள்வனவுச் சக்தி மிகச் சடுதியான வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் பொருளாதாரம் சாதாரண நிலையில் இயங்கியபோது அறவிட்ட வரிவீதங்களுக்கு உடனடியாகப் பின்னோக்கித் தாவுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பது அவசியம் என்றபோதிலும் வரி அதிகரிப்புகளை படிப்படியாக கால இடைவெளி விட்டு செய்திருக்க வேண்டும்.

இப்போது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்தவே மக்கள் அல்லல் படும் அவலநிலையில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள மற்றும் வர இருக்கும் வரி அதிகரிப்புகள் அரசாங்கத்தின் அரசியல் எதிர்காலத்தை மிக மோசமாகப் பாதிக்கும். தேர்தல் ஒன்று வரும்போது அதன் விளைவுகள் தெரியவரும். இவ்வரி அதிகரிப்புகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளின் முன்கூட்டிய பிரதிபலிப்பு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மறுபுறம் அரச செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டிய பரிதாப நிலையும் அரசாங்கத்திற்கு உள்ளது. விரலுக்கு மீறிய வீக்கமாக வீங்கிப்போயுள்ள அரசாங்கத்தின் பருமன் அரச வருவாயின் மிகப்பெரிய பகுதியினை அரச ஊழியர்களுக்கான சம்பளமாகவும் ஓய்வுதியமாகவும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

இதனால் முன்னைய வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கபட்ட அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை உடனடியாக 60 வயதாகக் குறைக்கபட்டுள்ளது அதுமட்டுமன்றி ஏற்கெனவே அரச ஊழியர்கள் 5 வருட காலத்திற்கு சம்பளமற்ற விடுமுறையில் நிபந்தனையுடன் வெளிநாடு செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெறவும் திட்டம் (voluntary retirement scheme – VRS) இருப்பதாகவும் தெரிகிறது. இதன்மூலம் அரசு துறையில் உள்ள பதின்மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள்ன் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் குறியாக உள்ளமை தெரிகிறது.

அரச ஊழியர்கள் பலர் சும்மா இருந்து சம்பளம் பெறுகிறார்கள் என்ற அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகளையும் இதனுடன் பொருத்திப்பார்க்க வேண்:டும். 2025 ஆண்டளவில் வரவு செலவுத்திட்டத்தின் ஆரம்ப நிலுவையை மிகைநிலைக்கு மாற்ற விரும்புவதாக வரவு செலவுத்திட்ட உரையில் குறிப்பிடப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் வரவு செலவுத்திட்டக் குறைநிலையினை முகாமை செய்யக்கூடிய ஒரு மட்டத்திற்கு குறைக்குமாறும் அரசிறை சிக்கனத் தன்மையைப் (fiscal austerity) பேணுமாறும் அறிவுறுத்தும்.

எனவே அரச செலவினங்களைக் குறைப்பது ஒரு முக்கிய குறிக்கோளாகக் கூறப்பட்டுள்ளது. மூலதனச் செலவினங்களைப் பிற்போட்டு நடைமுறைச் செலவினங்களில் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் நிலையில் உள்ள 61 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் நான்கு மாத காலப்பகுதிக்கு உதவு தொகை வழங்கப்படும் என்றும் சமுர்த்தி உதவிபெறும் 1.7 மில்லியன் குடு்ம்பங்களுக்கு 7500 வரையிலான உதவு தொகைகள் வழங்கப்படுமெனவும் சமுர்த்திக்காக விண்ணப்பித்துள்ள 726 ஆயிரம் குடும்பங்களுக்கு 5000 ரூபா வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சில சலுகைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தாலும் மக்களின் வருவாய் வழிகளைப் பலப்படுத்தும் முன்மொழிவுகளைப் பெருமளவில் காணமுடியவில்லை மீன்பிடித்தொழிலுக்கு மண்ணெண்ணெய் மானியம் அமெரிக்க நிதி உதவியில் விவசாயிகளுக்கு இரசாயன உரம் போன்ற இனிப்புகள் ஆங்காங்கே துாவப்பட்டுள்ளமையைக் காண முடிகிறது.

பணத்தை அச்சிடுவதன் மூலமே அரச ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகளை நிதிப்படுத்த வேண்டியுள்ளதென அரசாங்கம் முன்னர் கூறியது. இப்போது வரியதிகரிப்பு மூலம் செலவுகளை நிதிப்படுத்த முனைவது வெளிப்படையாகத் தெரிகிறது. அரசாங்கத்தின் கட்டற்ற பண அச்சடிப்பு இன்றைய தாவிச் செல்லும் பணவீக்கத்திற்கு (galloping inflation) வகைகூறவேண்டிய காரணிகளில் முதன்மையானதாகும்.

பணவீக்கத்திற்கு எதிர்வினையாக வட்டிவீதங்களை அதிகரிக்கும் நடவடிக்கையும் உச்சத்திற்கு வந்துவிட்ட நிலையில் மேற்கொண்டு வட்டிவீதங்களை அதிகரிப்பது நிதித்துறையின் முறிவுக்கு இட்டுச் செல்லும் அபாயம் நிலவும் நிலையில் மாற்றுவழிகளை தேடிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

செலவினக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் நட்டத்தில் இயங்கும் அரசதுறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதும் ஏற்கெனவே வரவு செலவுத்திட்டத்தின் கணிசமான நிதியை கபளீகரம் செய்யும் மிகப்பெரிய நட்்டத்தில் இயங்கும் மூன்று நிறுவனங்களையும் கையாள்வதும் இப்போதுள்ள பிரதான சவால் எனத் தெரிகிறது. இரண்டு அரச வங்கிகளின் மூலதனத் தேவைப்பாட்டின் பொருட்டு அவற்றின் பங்குகளை வைப்பாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கவும் முன்மொழிவுகள் காணப்படுகின்றன. சுருங்கக்கூறின் இது சர்வதேச நாணய நிதியத்தின் விதந்துரைப்புகளைப் பிரதிபலிக்கும் ஒரு வரவு செலவுத்திட்ட முன்மொழிவாகவும் பார்க்கப்பட முடியும்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: