பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே லங்கா நெட் நிவ்ஸிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்

நேற்றிரவு (23.09.2022) சவுதி அரேபியா தூதரகத்தின் ஏற்பாட்டில் ஷங்கரிலா ஹோட்டலில் சவுதி அரேபியா சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கடந்த காலங்களில் முஸ்லிம்களையும் முஸ்லிம் நாடுகளையும்  பகிரங்கமாக விமர்சித்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் பொதுபல சேனாவின் தலைமை நிர்வாக அதிகாரி  டிலந்த விதானகே ஆகியோர் கலந்து கொண்டமை தொடர்பாக பலவிதமான விமர்சனங்களும், கேலிச் சித்திரங்களும் இன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வண்ணமுள்ளது.

இது தொடர்பாக லங்கா நெட் நிவ்ஸ் பொதுபல சேனாவின் தலைமை நிர்வாக அதிகாரி  டிலந்த விதானகே அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணல்.

கடந்த சில மாதங்களாக பொது பல சேனா அமைப்பின் செயற்பாடுகளை காணமுடிவதில்லை, அமைதியாக செயற்படுகிறது அதற்கான காரணம் என்ன?

நான் கடந்த நான்கு ஆண்டுகளாக பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளில் ஈடுபாடுகாட்டவில்லை. ஞான சார தேரர் தொடர்ந்தும் செயற்பட்டார்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள், ஞானசார தேரர் அவர்களை ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவின் தலைவராக நியமித்த பின்னர் அது சார்ந்த செயற்பாடுகளில் தேரர் அதிக கவனம் செலுத்தினார். இதனால் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் குறைவடைந்துள்ளது.

பொது பல சேனா அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக, இனவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது இது தொடர்பாக?

இது ஊடகங்கள் மற்றும் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்ட தவறான கருத்தாகும். நமக்கு முஸ்லிம்களுடன் எவ்வித விரோதப் போக்கும் இல்லை.  நான் தற்போது முஸ்லிம் வீடொன்றில் இருந்தவாறே உங்களுக்கு பதிலளிக்கிறேன்.

நமக்கு முஸ்லிம்களுடன் எவ்வித விரோதப் போக்கும் இல்லை. ஆனால் தேரர் அவர்கள் முஸ்லிம் பெயரில் இடம்பெற்ற தீவிரவாத செயற்பாடுகளுக்கு எதிராகவே செயற்பட்டார்.

முஸ்லிம் பெயர்களை பயன்படுத்தி நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராகவே தேரர் இருந்தார். அவர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவில்லை.

கட்டார் சரிட்டி அமைப்பு தீவிரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்குவதாக கூறி  முன்னாள் ஜனாதிபதி தடை செய்தார். ஆனால் தற்போது அத்தடை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக?

அவை அரசியல் தீர்மானம் எனவே அது தொடர்பாக கூற முடியாது. ஒரு காலத்தில் தீவிரவாதிகளாக இருந்தவர்களே இன்னொரு காலத்தில் ஜனாதிபதிகளாக பதவியேற்கின்றனர். ஆயுதம் எடுத்த ஜே.வி.பியினர் இன்று அமைச்சர்களாக உள்ளனர். 1970 – 1980 களில் பல கொலை வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் பலர் இன்று பாராளுமன்றத்தில் உள்ளனர். கொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கும் அரசியல் விடுதலை வழங்கும் நடவடிக்கை பிறநாடுகளிலும் உள்ளது.

எனவே கட்டார் சரிட்டிக்கான தடையை நீக்கியதும் அரசியல் தீர்மானமாகும். அது எம்முடன் தொடர்புடைய விடயமல்ல.

கடந்த காலங்களில் அரபு நாடுகளுக்கு எதிராக பேசி விட்டு நேற்றிரவு சவுதி அரேபிய தேசிய தின விழாவில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உட்பட அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகிய தாங்களும் கலந்து கொண்டீர். இது தொடர்பாக இன்று சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இந்த இரட்டை வேடத்திற்கான காரணம் என்ன?

நாம் முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக பேசவில்லை. மாறாக தீவிரவாதத்திற்கு நிதி வழங்கியபோது அதற்கு எதிராகவே பேசியுனோம்.

நேற்று சவுதி அரேபிய தேசிய தினமாகும். அதற்கு சவுதி அரேபிய தூதரகம் எமக்கும் அழைப்பு விடுத்திருந்தது. எனவே நாம் சென்றோம். அதை ஏன் விமர்சிக்க வேண்டும்?

நாம் இவ்வாறு ரஷ்யா, சுவிஸ்லாந்து தேசிய தினங்களிலும் பங்கேற்றுள்ளோம். அவ்வாறே சவுதி அரேபிய தேசிய தினத்தில் பங்கேற்றதும் விசேடமான ஒன்றாகும். அழைப்புவிடுத்தால் நாம் செல்ல வேண்டும்.

சவுதி அரேபிய புதிய அரசரின் ஆட்சியின் கீழ் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. சவுதி அரேபிய தூதரகமும் ஞானசார தேரரின் செயற்பாடுகள் தொடர்பாக எம்மிடம் விசாரித்துள்ளது. இவ்வாறு எமக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்புகள் காரணமாக அழைப்புவிடுத்திருக்கலாம்.

நாம் மாத்திரமல்ல ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர், ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். நாமும் இந்த நாட்டு பிரஜைகளே.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு பொதுபலசேனாவின் பங்களிப்பு என்ன?

உண்மையில் பொதுபல சேனா இது தொடர்பாக பேசவே ஆரம்பிக்கபட்டது. இலங்கையில் பொருளாதார சிக்கல் ஏற்படுவது தொடர்பாகவும் பேசியுள்ளோம். ஆனால்  ஊடகங்கள் அவற்றை வௌியிடுவதில்லை.

இலங்கையின் விவசாயத்துறையை முன்னேற்ற வேண்டும். இலங்கையின் கல்வித்துறையை மாற்ற வேண்டும். இது தொடர்பாக நாம் அதிகமாக பேசியுள்ளோம். ஆனாலும் இலங்கையில் உள்ள பிரச்சினைதான் ஊடகங்கள் அவற்றுக்கு பதிலாக ஏதாவது விமர்ப்பதையும், ஏசுவதையும்தான் வெளியிடுகின்றது. ஊடகங்களில் நாம் எவ்வளவு நல்ல விடயங்களை பேசினாலும் வௌியிடுவதில்லை. இலங்கையின் அனைத்துதுறைகளிலும் இவ்வாறுதான்

கோட்ட வந்து நாட்டை மீட்பாரா? ரணில் நாட்டை மீட்பார  என்று? அனைவரும் கேட்கின்றனர். அங்குதான் பிரச்சினையுள்ளது. நாட்டை மீட்க வேண்டுமென்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கோட்டாவினாலும், ரணிலினாலும், மஹிந்தவினாலும் தனியாக நாட்டை மீட்க முடியாது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்திற்காக செயற்பட வேண்டும்.

பொதுபலசேனாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

நான் கடந்த காலங்களில் பொதுபலசேனாவின் செயற்பாடுகளில் ஈடுபாடுகாட்டவில்லை. நாம் எவருக்கும் ஆதரவளிக்காமல் சுதந்திரமாக செயற்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் தேரர் ஆதரவாக செயற்பட வேண்டுமென தீர்மானித்தார். இது நம் இருவரின் இரண்டு கருத்து. எனவே நான் அதிகமாக செயற்பாடுகளில் ஈடுபாடுகாட்டவில்லை ஆனால் எமக்கிடையில் பிரச்சினைகள் இல்லை. எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

நன்றி – லங்கா நெட் நிவ்ஸ்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: